அருஞ்சொற்பொருள்
அதலம் அடியற்றது என்ற பொருள் கொண்ட முதல் பாதாளம். [அதலம் விதலம் சுதலம், தராதலம், மகாதலம், இரசாதலம், பாதாளம்]
அவிப்பொருட்கள் ஹவிஸ் என்றசொல் தீயிலிடப்படும் வேள்விப்பொருட்களைச் சுட்டுகிறது. அவி என்பது அதன் தமிழ். அவிதல் என்ற சொல் எப்போதும் தமிழில் இருந்துகொண்டிருக்கிறது. இங்கிருந்து அங்கே சென்ற சொல்லாகக்கூட இருக்கலாம்
உண்டாட்டு போருக்குப்பின் நிகழும் பெருவிருந்து
கல்லாலமரம் ஆலமரத்தில் ஒரு வகை. தென்திசை முதல்வனாகிய தட்சிணாமூர்த்தி அமர்ந்திருக்கும் மரத்தடி. தட்சிணாமூர்த்தியே குரு வடிவம்
கார்மிகர்கள் கர்மம் என்றால் செயல். வேள்வி எனும் செயலை செய்விப்பவர்கள்.
கிருஷ்ணபட்சம் தேய்பிறை. கிருஷ்ண என்றால் கரிய நிறம்
சத்வகுணம் அமைதி சீர்மை ஆகியவற்றைச் சுட்டுவது. வெண்ணிறம் கொண்டது. சமவிசை
சப்த ரிஷிகள் மரீசி, ஆங்கிரஸ், அத்ரி, புலஸ்தியன், வசிஷ்டன், புலஹன், கிருது; வானில் சேர்ந்தே இருக்கும் ஏழு விண்மீன்களின் கூட்டம்
சுக்லபட்சம் வளர்பிறை. சுக்ல என்றால் வெண்மை நிறம்
தமோகுணம் தேக்கம், இருட்டு ஆகியவற்றைச் சுட்டுவது. கருநிறம் கொண்டது. அல்லது நீலநிறம். எதிர்விசை
நைஷ்டிக பிரம்மசாரி துறவுக்கு முன்னரே காம விலக்கத்தை ஒரு நிஷ்டையாக அதாவது நெறியாகக் கொண்டிருப்பவர்
பிரஜாபதி தன்னில் இருந்து படைப்பை உருவாக்கும் ஓர் ஆதி விசை அல்லது ஆதி இருப்பு
புடவி பிரபஞ்சம் என்பதற்கான தூயதமிழ்ச்சொல். பூமி. புடவுதல் என்றால் வீங்குதல், விரிதல்
பூதயாகம் வேள்விகளில் ஒரு வகை. உலகியல் நன்மைக்காக மட்டுமே செய்யப்படுவது
மகாபிரஸ்தானம் பாண்டவர்கள் கடைசியாக துறவறம் பூண்டு காடு புகுந்த நிகழ்ச்சி
முக்குணங்கள் ரஜோகுணம் தமோகுணம் சத்வகுணம் என குணங்கள் மூன்று. இவை எல்லா இந்திய சிந்தனைகளிலும் முக்கியமானவை. ஆனால் சாங்கிய சிந்தனை இதையே அடிப்படையாகக் கொண்டது.
யக்ஞ எஜமானர் வேள்வியை நடத்தும் தலைமை வைதிகர். யஜ் என்ற சொல்லில் இருந்து வந்தது யஜமானன் என்ற சொல்.
ரஜோகுணம் ராஜா என்ற சொல்லே இதிலிருந்து வந்தது. செயலூக்கம் வேகம் ஆகியவற்றைச் சுட்டுவது. செந்நிறம் கொண்டது. நேர்விசை
ரித்விக் வேதகோஷங்களைச் செய்து வேள்விகளை நிகழ்த்துபவர்
வேள்வி யாகம். தூய தமிழ்ச்சொல் வேட்டல் என்ற பொருள் உள்ளது. வேள் என்பது வேர்ச்சொல். வேட்டை, வேட்கை போன்றவை அதிலிருந்து வந்தவை
ஹோதா ஹோமிப்பவர். வேள்வித்தீயில் பொருட்களை இட்டு எரியவைப்பவர்
Unless otherwise stated, the content of this page is licensed under Creative Commons Attribution-NoDerivs 3.0 License