'வெண்முரசு' - நூற்களஞ்சியம்

Included page "clone:venmurasu" does not exist (create it now)

0000%20VENMURASU%20HEADER%2001.jpg

அறிமுகம்

ஜெயமோகனின் ‘வெண்முரசு’ மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்படும் பெரும் இலக்கிய ஆக்கம். ஐநூறு பக்கங்கள் கொண்ட பத்து நாவல்களின் வரிசை. ஒவ்வொருநாளும் ஓர் அத்தியாயம் என பத்துவருடங்கள் தொடர்ந்து எழுதி உருவாகி வரும் காவியம்.

வெண்முரசை தொடரும் வாசகர்களுக்கு உதவியாக இந்த நூற்களஞ்சியம் உருவாக்கப்படுகிறது. நூலில் வரும் ஆயிரக்கணக்கான பாத்திரங்கள், வம்சங்கள், உறவுமுறைகள், இடங்கள், நிகழ்வுகள் போன்றவையும் மற்ற பல அரிய தகவல்களும் இந்தக் களஞ்சியத்தில் பல்வேறு தலைப்புகளிலும் அகரவரிசைகளிலும் தொகுக்கப்படும்.

0000Jeyamohan02.jpg

"…இது ஒரு நவீன நாவல். தொன்மங்களையும் பேரிலக்கியங்களையும் மறு ஆக்கம் செய்யும் இன்றைய இலக்கியப்போக்குக்குரிய அழகியலும் வடிவமும் கொண்டது. ஓர் இலக்கிய வாசகனுக்கு இது உள்விரிவுகளை திறந்துகொண்டே செல்லக்கூடும். ஆனால் எந்த ஒரு எளிய வாசகனும் உணர்ச்சிகரமான ஈடுபாட்டுடன் வாசிக்கக்கூடியதாகவே இது இருக்கும். மகாபாரதத்தின் மகத்தான நாடகத்தருணங்களையே அதிகமும் கையாளும். அதன் கவித்துவத்தையும் தரிசனத்தையும் தீண்டிவிடவேண்டுமென்ற கனவுடன் இது எழும். வியாசனெழுதிய ஒவ்வொன்றையும் இன்று இங்கே என உள்வாங்கிக்கொள்ளவேண்டுமென இது முயலும்.

மரபிலிருந்து ஒரு வினா எழலாம். வியாசபாரதத்தை இப்படி மீறிச்செல்ல அனுமதி உண்டா என. புராணங்கள் மெய்மையைச் சித்தரிப்பதற்கான படிமத்தொகையையே நமக்களிக்கின்றன. ஆகவே அனைத்துப் புராணங்களும் பல்லாயிரம் வருடங்களாக தொடர்ந்து மறு ஆக்கம் செய்யப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன. மகாபாரதக்கதையை மறு ஆக்கம்செய்யாத பெருங்கவிஞர்களே இந்தியாவில் இல்லை என்பார்கள்.

இந்நாவல் மகாபாரதத்தை மட்டுமே ஆதாரமாகக் கொண்டதல்ல. மகாபாரதக் கதைகளையும் கதைமாந்தர்களையும் வெவ்வேறு திசைகளில் வளர்த்தெடுத்த பிற புராணங்களையும் கருத்தில்கொண்டிருக்கிறது. மகாபாரதத்துக்குப்பின் குறைந்தது ஈராயிரம் வருடங்கள் கழித்து எழுதப்பட்ட பாகவதம், மேலும் ஐநூறு வருடங்கள் கழித்து உருவான தேவிபாகவதம் ஆகியநூல்களின் மகாபாரதக் கதைகளும் பல நாட்டார் பாரதக்கதைகளும் இந்நாவலில் உள்ளன என்பதை வாசகர்கள் காணலாம்.

இது ஒவ்வொருநாளும் கொஞ்சமேனும் வாசிக்கக்கூடியவர்களுக்கான படைப்பு. ஒவ்வொருநாளும் வாசித்தவற்றைப்பற்றி தியானிக்கக்கூடியவர்களுக்கானது. அவர்களின் வாழ்க்கையை மேலும் சிலவருடங்கள் வியாசனின் மானுடநாடகம் ஒளியேற்றுவதாக! அவர்கள் தங்கள் வியாசனை எனது வியாசனிலிருந்து கண்டுகொள்ள நேர்வதாக!"

—ஜெயமோகன், 01-ஜனவரி-2014

Unless otherwise stated, the content of this page is licensed under Creative Commons Attribution-NoDerivs 3.0 License